சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இனிவரும் காலங்களில் பரிசோதனை மையங்களில் கொரோனா வைரஸ் தொற்று பரிசோதனை மேற்கொண்டாலே பரிசோதனை மேற்கொள்ளும் நபர் மற்றும் அவரது வீட்டில் உள்ள அனைவரும் கட்டாயம் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்று ஆணையாளர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
30 பரிசோதனை மையங்ககளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் பேசிய ஆணையர், பரிசோதனைக்கு வருபவர்களின் பெயர், முகவரி, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களின் விவரங்களை பெற்று சென்னை மாநகராட்சிக்கு தெரியப்படுத்த வேண்டும் என்று கூறினார்.
வைரஸ் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டவர்களுக்கு தேவையான உதவிகளை மேற்கொள்ள 6 ஆயிரம் பணியாளர்கள் ஈடுபட உள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் வழிமுறைகளைப் பின்பற்றி கிருமி நீக்கம் மற்றும் பணியாளர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்கப்படுவதை பரிசோதனை மையங்கள் உறுதி செய்ய வேண்டும் என்று ஆணையாளர் பிரகாஷ் கேட்டுக்கொண்டார்.