மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லத்தை, நினைவில்லமாக மாற்ற தடை கோரிய வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து, மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
பல விசாரணைகளில் சம்பந்தப்பட்டுள்ள அந்த இல்லத்தை, அரசு செலவில் நினைவு இல்லமாக மாற்ற முடியாது எனவும், நினைவு இல்லமாக மாற்ற அப்பகுதியைச் சேர்ந்த 108 பேர் ஆட்சேபம் தெரிவித்துள்ளதாகவும் முறையிட்ட மனுதாரர் இதுதொடர்பாக அரசுக்கு அனுப்பிய மனுவை பரிசீலிக்க உத்தரவிட கோரியிருந்தார்.
நினைவு இல்லமாக மாற்ற அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், அரசுக்கு மின்னஞ்சலில் அனுப்பிய கடிதத்தை பரிசீலிக்கும்படி கோரிய வழக்கை எப்படி விசாரணைக்கு ஏற்க முடியும் என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மனுதாரரின் கோரிக்கையை ஏற்று, வழக்கை திரும்பப் பெற நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.