சென்னையில் ஒரே நாளில் 809 பேருக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 82 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்ட வாரியாக ஏற்பட்டுள்ள கொரோனாவின் தாக்கம் குறித்த விவரங்களை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
அதன்படி, பட்டியலில் தொடர்ந்து உச்சத்தில் இருக்கும் சென்னையில் மட்டும் புதிதாக 809 பேர் வைரஸ் தொற்றுக்கு ஆளாகி இருப்பதால், இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்து 585 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் மொத்தம் 150 பேரின் உயிர்களை கொரோனா பறித்துள்ளது. தலைநகரில் இதுவரை பாதிக்கப்பட்டவர்களில் 7 ஆயிரத்து 880 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், 8 ஆயிரத்து 554 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
கொரோனா பாதிப்பில் இரண்டாவது இடத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் மேலும் 82 பேருக்கு வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதால், மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 300ஐ தாண்டி இருக்கிறது.
திருவள்ளூர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளதால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது.
தூத்துக்குடியில் ஒரே நாளில் 51 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 20 பேர் வெளிமாநிலங்களில் இருந்து திரும்பவர்கள் ஆவர்.
திருநெல்வேலியில் மேலும் 12 பேருக்கும், திருவண்ணாமலையில் ஒரே நாளில் 14 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காஞ்சிபுரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 15 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கன்னியாகுமரி, திருச்சியில் தலா 7 பேருக்கு பெருந்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த கொரோனா பாதிப்பு 24 ஆயிரத்தை தாண்டியிருக்கும் சூழலில், நீலகிரி, திருப்பூர் மாவட்டங்கள் மட்டும் கொரோனா நோயாளிகள் இல்லாமல் இருப்பதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.