சென்னையில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்.
தமிழகம் முழுவதும் 22 ஆயிரத்து 333 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் பாதிக்கும் மேற்பட்ட, அதாவது 14,802 பாதிப்புகள் சென்னையில் மட்டும் பதிவாகியுள்ளன.
மேலும் பாதிப்பும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனால் சென்னையின் 15 மண்டலங்களில் பாதிப்பு அதிகமுள்ள 5 மண்டலங்களில் நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்த அரசு அடுத்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து நாளை முதலமைச்சர் ஆலோசனை நடத்துகிறார்.
மேலும் சித்த மருத்துவ முறையிலான கசாயம் வழங்கி நோயின் தீவிரத்தை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. அந்த கூட்டத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் பீலா ராஜேஷ், சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அதிகாரிகள், பங்கேற்க உள்ளனர்.