சென்னையில் இருந்து பிற மாவட்டங்களுக்குச் செல்லும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் எனத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மண்டலங்களுக்கு இடையேயான போக்குவரத்து, வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வருபவர்கள் கொரோனா சோதனை, தனிமைப்படுத்தலில் பின்பற்ற வேண்டிய நெறிமுறைகள் குறித்து நலவாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
ஒரே மண்டலத்துக்குள் பயணம் செய்ய இ - பாஸ் தேவையில்லை. பயணம் செய்பவர்களுக்கு கொரோனா சோதனை செய்ய வேண்டியதில்லை.
ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்துக்குப் பயணம் செய்பவர்களுக்கு அறிகுறி இருந்தால் மட்டும் சோதனை செய்யலாம்.
ஒரு மண்டலத்தில் இருந்து இன்னொரு மண்டலத்துக்குச் செல்வோர் அது குறித்த தகவல்களை இ பாஸ் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.
சென்னையில் இருந்து வேறு மண்டலத்துக்குச் செல்லும் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும்.
தொற்று இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.தொற்று இல்லை என்றால் வீட்டில் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். வீட்டில் வசதி இல்லை எனில் முகாம்களில் 7 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
கொரோனா பாதிப்பு அதிகமுள்ள டெல்லி, குஜராத், மகாராஷ்டிர மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் அனைவருக்கும் கொரோனா சோதனை செய்ய வேண்டும்.
சோதனையில் தொற்று உறுதியானால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும்.
தொற்று இல்லை என்றால் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். வீட்டில் வசதி இல்லை எனில் முகாம்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும்.
குஜராத், டெல்லி, மகாராஷ்டிரம் நீங்கலாகப் பிற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருவோருக்கு அறிகுறி இருந்தால் மட்டும் சோதனை செய்ய வேண்டும்.
தொற்று இருந்தால் உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க வேண்டும். தொற்று இல்லை என்றால் வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும். வீட்டில் வசதி இல்லை எனில் முகாம்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்த வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.