தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் புதிய உச்சம் தொட்ட கொரோனாவால், சென்னையில் மட்டும் உயிரிழப்பு 100 - ஐ தாண்டி விட்டது. சென்னையில் பெருந்தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில், கொரோனா பாதிப்பு அதிகரித்து ,சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 559 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி உள்ளது. இதனால், இங்கு மட்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 12 ஆயிரத்து 762 ஆக உயர்ந்துள்ளது.
திருவள்ளூரில் ஒரே நாளில் 38 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆக, செங்கல்பட்டில் 45 பேரும், காஞ்சியில் 20 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
திண்டுக்கல்லில் பிறந்து 10 நாட்களே ஆன ஒரு குழந்தையும், திருவண்ணாமலை யில் 10 மாத குழந்தையும், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவர்களில் 117 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் சேலம், திருவண்ணாமலை,
திருநெல்வேலி மாவட்டங்களில் வைரஸ் தொற்று உறுதி ஆனோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையில் மட்டும் 6 ஆயிரத்து 351 பேர், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வர, இதுவரை 6 ஆயிரத்து 304 பேர் குணம் அடைந்து, வீடு திரும்பி உள்ளனர்.
12 வயதுக்கு உட்பட்டவர்களை பொறுத்தவரை, 552 சிறுமிகள் உள்பட ஆயிரத்து 159 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
13 வயது முதல் 60 வயதுக்கு உட்பட்டவர்களில் 5 ஆயிரத்து 940 பெண்கள் உள்பட 16 ஆயிரத்து 491 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 656 மூதாட்டிகள் உள்பட மொத்தம் ஆயிரத்து 722 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
மொத்தம் உள்ள 37 மாவட்டங்களில், 17 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் கூட, வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட வில்லை .
கடந்த 24 மணி நேரத்தில் பலி ஆன 12 பேரில் , சென்னை தனியார் மருத்துவமனையில் 4 பேரும், அரசு மருத்துவமனைகளில் 7 பேரும் உயிரிழந்தனர். திருவண்ணாமலையைச் சேர்ந்த 44 வயது ஆண் ஒருவர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மரணம் அடைந்தார்.
தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்த 145 பேரில், 106 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள்.
செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 10 பேரை கொரோனா காவு வாங்கி உள்ளது. மதுரை, தூத்துக்குடி, தேனி , திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் தலா 2 பேர் வைரஸ் தொற்றுக்கு இரை ஆகி உள்ளனர்.
மிரட்டும் கொரோனாவை விரட்டும் பணியில் தமிழக சுகாதாரத்துறையினர் முழு வீச்சில் பணியாற்றி வருகிறார்கள்.