வன்கொடுமை தடைச் சட்டத்தின்கீழ் திமுக எம்.பி.க்கள் தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் தற்போதுள்ள நிலையே தொடர வேண்டும் என காவல்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தலைமை செயலாளருடனான சந்திப்புக்கு பிறகு தாழ்த்தப்பட்டோரை அவமதிக்கும் வகையில் பேட்டியளித்ததாக அளிக்கப்பட்ட புகாரின்பேரில், கோவையில் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரியும், மேல் விசாரணைக்கு தடை கோரியும் 2 பேரும் மனு தாக்கல் செய்தனர். அதன்மீதான விசாரணையின்போது, அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் பழி வாங்கும் நோக்கில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக 2 பேர் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.
காவல்துறை தரப்பில், தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களை இழிவுபடுத்தும் வகையிலும் 2 பேரும் உள்நோக்கத்துடனும் பேசியுள்ளதால் கைது செய்து விசாரிக்க வேண்டியிருப்பதாக கூறி, அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து மனு குறித்து பதில் தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை 29 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.