சுமார் 85 லட்சம் மக்கள் தொகை கொண்ட சென்னையில் கொரோனா வைரஸ் தடுப்பு பணி சவாலாக இருப்பதாகவும், சென்னையில் வைரஸ் பரவலை முற்றிலும் தடுக்க பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் தேவை என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியவாணி முத்துநகரில் இந்திய ஹோமியோபதி மற்றும் சித்த மருத்துவதுறை சார்பில் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் விஜயபாஸ்கர், மக்களின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் தமிழக அரசு செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன், கடந்த 3 நாட்களாக சென்னையின் 31 வார்டுகளில் ஒருவருக்கு கூட புதிதாக பாதிப்பு ஏற்படவில்லை என்றார். சென்னையில் நோய்த்தொற்று அதிகமுள்ள தண்டையார் பேட்டை, திருவிக நகர், இராயபுரம், கோடம்பாக்கம் ஆகிய நான்கு மண்டலங்களில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.