சென்னையில் ஒரே நாளில், 279 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது. மொத்தமுள்ள 37 மாவட்டங்களில் 17 மாவட்டங்களில் ஒருவர் கூட, புதிதாக வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை.
சென்னையில், கொரோனாவின் பாதிப்பு, நாளுக்கு நாள், கணிசமான அளவில் உயர்ந்து வருகிறது.
தமிழகத்தில் ஒரே நாளில் வைரஸ் தொற்றால் 526 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இவர்களில் 279 பேர் சென்னையை சேர்ந்தவர்கள். இதேபோல, கொரோனா காவு வாங்கிய 44 பேரில், 27 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை வெளியிட்ட மருத்துவ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தற்போதைய சூழலில், அச்சத்தில் உறைந்துள்ள சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்து 330 ஆக உயர்ந்துள்ளது.
விழுப்புரத்தில் ஒரே நாளில் 67 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆனதால், அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்தது. சென்னை - கோயம்பேட்டில் இருந்து 850 பேர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு சென்றதால், பாதிப்பு உயர்ந்து வருகிறது.
செங்கல்பட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 40 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்தது.
பெரம்பலூரில் 31 பேர் பாதிக்கப்பட்டு, இதன் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது. இதில் 83 பேர், கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பி, தனிமைபடுத்தி வைக்கப்பட்டிருந்தவர்கள்.
திருவள்ளூரில் ஒரே நாளில் 26 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, பாதிப்பு எண்ணிக்கை 290 ஆக அதிகரித்தது. இதேபோல காஞ்சிபுரத்தில் ஒரே நாளில் 17 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி ஆகி, 114 ஆக பாதிப்பு உயர்ந்துள்ளது.
கோயம்பேட்டில் இருந்து சொந்த ஊர் திரும்பிய பலர், கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகிறார்கள்.
மொத்தமுள்ள 37 மாவட்டங்களில், 17 மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக ஒருவர் கூட கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படவில்லை. அதேநேரம், 20 மாவட்டங்களில் கொரோனா, தனது கொடூரத்தை அரங்கேற்றி உள்ளது.
வயது வாரியாக பார்க்கும் போது, 12 வயதுக்கு உட்பட்டோர்களில், 174 சிறுவர்களும் 153 சிறுமிகளும் பாதிக்கப்பட்டு உள்ளனர். 13 வயது முதல் 60 வயது வரை உள்ளவர்களில், ஆண்கள் - 4 ஆயிரத்து 35 பேர், பெண்கள் - ஆயிரத்து 715 பேர் , திருநங்கை இருவர் என மொத்தம் 5 ஆயிரத்து 752 பேர் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். 60 வயதுக்கு மேற்பட்டவர்களை பொறுத்தவரை, 454 பேருக்கு, வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது.