சென்னை பூந்தமல்லி அடுத்த திருமழிசையில் தற்காலிக காய்கறி சந்தை அமைக்கும் பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், திங்கட் கிழமை முதல் அங்கு விற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா பரவல் காரணமாக, கோயம்பேடு காய்கறி சந்தை மூடப்பட்டு, திருமழிசையில் தற்காலிகமாக செயல்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து, 200 அங்காடிகளுடன் திருமழிசையில் சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் ஆகியோர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்தனர்.
இந்த நிலையில், கடைகளை பிரித்து வழங்குவது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் தலைமையில் எழும்பூரில் நடைபெற்றது. இதில், 200 கடைகளும் வியாபாரிகளுக்கு குலுக்கல் முறையில் பிரித்து வழங்கப்பட்டன.
கோயம்பேடு போல கொரோனா பரவலுக்கு வழிவகுத்துவிட கூடாது என்பதற்காக, வியாபாரிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பொதுமக்களுக்கு முற்றிலும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 முதல் காலை 7 மணி வரை மட்டுமே மொத்த விற்பனை நடைபெறும். சில்லறை வியாபாரிகள் ஆட்டோ, இருசக்கர வாகனங்களில் வருவதற்கு தடை விதிக்கப்பட்டதோடு, மினி லாரியில் வருபவர்களுக்கு மட்டும் காய்கறிகள் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லோடு ஏற்றி வரும் லாரிகள் மீது கிருமி நாசினி தெளிக்கவும், அனைவரும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து, தனிநபர் இடைவெளியுடன் பணிகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பாதுகாப்பு பணியில் கூடுதலாக போலீசாரும் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
சந்தை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நாளை முதல் காய்கறிகள் கொள்முதல் செய்யப்பட்டு, திங்கட்கிழமையில் இருந்து விற்பனை நடைபெறும் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.