சென்னை கோயம்பேட்டில் இருந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்குச் சென்றவர்களால் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து கடலூர் மாவட்டம் திரும்பியவர்களில் இன்று ஒரே நாளில் மட்டும் 105 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இவர்களில் ஞாயிற்றுக்கிழமை 24 பேருக்கு கொரோனா உறுதி ஆகியிருந்த நிலையில், மொத்தமாக 129 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கோயம்பேட்டில் இருந்து விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் சுற்றுவட்டார கிராமங்களுக்கு வருகை தந்த 163 பேர் அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களில் 39 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் 4 பேர் உட்பட ஒரே நாளில் 24 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் சென்னை கோயம்பேட்டில் இருந்து வந்த 20 பேரும் அடக்கம். ஏற்கனவே மாவட்டத்தில் 29 பேருக்கு தொற்று உறுதியாகியிருந்த நிலையில், தற்போது 53ஆக எண்ணிக்கை உயர்ந்துள்ளது.
கோயம்பேடு மார்க்கெட் பகுதியிலிருந்து கரூர் லாலாபேட்டை பகுதிக்கு வந்த இளைஞர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 42 பேரும் குணமாகி வீடு திரும்பிய நிலையில், ஆம்புலன்ஸ் ஊழியர் ஒருவரோடு சேர்த்து தற்போது தொற்று எண்ணிக்கை இரண்டாகியுள்ளது.
சென்னை கோயம்பேடு பகுதியில் இருந்து 600 பேர் தூத்துக்குடி மாவட்டம் திரும்பியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறினார்.
இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் சளி மற்றும் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு, ஆய்வுக்கு அனுப்பப்பட்டு வருவதாகக் கூறினார்.