சென்னையில் நோய் பரவலை கட்டுப்படுத்த அதிக அளவிலான சுகாதார பணியாளர்களை களமிறக்கி, வீடு வீடாக நடத்தப்படும் ஆய்வு பணியை 3 மடங்காக அதிகரிக்க வேண்டும் என பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ள போதிலும், தலைநகர் சென்னையில் நோய் பரவலின் வேகம் 3 மடங்காக அதிகரித்திருப்பது கவலையளிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
நேற்றைய நிலவரப்பட்டி, முதல் ஊரடங்கு காலத்துடன் ஒப்பிடும் போது 2வது ஊரடங்கு காலத்தில் ஒட்டுமொத்த தமிழகத்திலும் பாதிக்கப்பட்டவர்கள் அளவு 70% மட்டுமே இருந்தது. அதே நேரத்தில், இந்த அளவீடு சென்னையில் மட்டும் 218% ஆக அதிகரித்துள்ளதாக அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளில் கபசுர குடிநீர் உள்ளிட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் சித்த மருந்துகளை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும். கூட்டம் கூடுவதை தடுக்க அத்தியாவசிய பொருட்களின் விற்பனை நிலையங்களை அதிகரிக்க வேண்டும் எனவும் அன்புமணி ராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.