கோயம்பேடு மார்கெட்டில் உள்ள சில்லரை வியாபார கடைகளை மட்டும் இடமாற்ற சிஎம்டிஏ முடிவு செய்துள்ள நிலையில், அதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
சென்னை கோயம்பேடு சந்தையில் இதுவரை 4 நபருக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், காய்கறிகள், பழங்கள் சந்தையை பிரித்து இடமாற்றம் செய்ய அரசு முடிவெடுத்தது. இதற்காக இன்று காலை மீண்டும் இரண்டாம் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
கோயம்பேடு சந்தையில் இயங்கி வரும் மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு வியாபாரிகள் கடைகளை இரண்டாகப் பிரித்து இயக்க முடிவெடுக்கப்பட்டது. மொத்த வியாபாரிகளுக்கு கோயம்பேட்டிலும், மீதமுள்ள சிறு வியாபாரிகள் அமைந்தகரை உள்ளிட்ட பல்வேறு பேருந்து நிலையங்கள், மைதானங்களில் விற்பனை செய்ய அறிவுறுத்தப்பட்டது.
ஆனால், சிறு வியாபாரிகள் கோயம்பேடுக்கு அருகில் உள்ள ஆம்னி பேருந்து நிலையத்திலும், சிஎம்டிஏ பார்க்கிங் இடத்திலும் விற்பனை செய்ய அனுமதி தரவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். இதற்கு அரசு தரப்பு உடன்படாத நிலையில், ஊரடங்கு காலம் நிறைவடையும் வரை கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கவுள்ளதாக சிறு வியாபாரிகள் தெரிவித்தனர்.