சென்னையில் கொரோனா பரிசோதனைக்காக ஏப்ரல் இறுதிக்குள் 40 ஆயிரம் பேரின் ரத்த மற்றும் சளி மாதிரிகளை சேகரிக்க திட்டமிட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் அமைக்கப்பட்டு வரும் தனிமைப்படுத்தப்பட்ட வார்டுகளை ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 35 இடங்களில் மாதிரிகள் சேகரிப்பு மையம் அமைக்கப்படவுள்ளதாகவும், ஏற்கனவே 16 மையங்களில் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், மாதிரிகளை வழங்க மக்கள் தயங்கக்கூடாது என்றும் கூறினார்.
சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் வசிக்கும் 80 பகுதிகள் முழுமையாக கட்டுபடுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்படுவதோடு, நாள்தோறும் கிருமிநாசினி தெளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.