கொரோனா ஆரம்ப கட்ட அறிகுறிகள் உள்ளவர்களை தனிமைப்படுத்தும் வார்டுகளாக மட்டுமே ரயில் பெட்டிகள் பயன்படுத்தபட உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
போதிய சுகாதாரமில்லாத ரயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாக மாற்றக்கூடாது என தொடரப்பட்ட வழக்கு வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது ரயில் பெட்டிகள் மருத்துவமனைகளாக மாற்றப்படவில்லை என்றும், தனிமை வார்டுகளாக மட்டுமே மாற்றப்பட உள்ளதாகவும் தெற்கு ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மருத்துவமனை இல்லாத கிராமங்களில் பாதிப்பு ஏற்பட்டால், அருகில் உள்ள ரயில் நிலையத்திற்கு இந்த பெட்டிகள் கொண்டு செல்லப்படும் என்று கூறப்பட்டது.
முதற்கட்ட அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே ரயில் பெட்டிகளில் தனிமைப்படுத்தப்படுவர் என்றும், மேல் சிகிச்சை தேவைப்பட்டால், அருகில் உள்ள மருத்துவனைக்கு மாற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த வழக்கில் பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என நீதிபதி வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.