ஊரடங்கால் விவசாயிகள் பாதிக்கப்படாமல் இருக்க விளைப்பொருட்களை அரசே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
தமிழக அரசு சார்பில் வழங்கப்படும் 1000 ரூபாய் மற்றும் அத்தியாவசிய பொருட்களை வீடுதேடி சென்று வழங்கக் கோரிய வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது தனிநபர் இடைவெளியை முறையாக கடைப்பிடித்து இதுவரை 96% பேருக்கு நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அதனை கேட்ட நீதிபதிகள் கொரோனா பாதிப்பு குறையாததால் மே மாதமும், ரேஷன் கடைகளில் கூட்டம் சேராமல் பொருட்களை விநியோகிக்க அறிவுறுத்தினர்.
மேலும் தமிழக விவசாயிகள் குறித்து வேதனை தெரிவித்த நீதிபதி கிருபாகரன், சிறு விவசாயிகளுக்கு 10 ஆயிரம் ரூபாய் கடனுதவி வழங்குவது போன்ற திட்டங்களை அரசு கொண்டு வர வேண்டியது அவசியம் என தெரிவித்தார்.