சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், பிற்பகலுக்கு பின்னர் மாநகர் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக 15 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
அதன்படி இன்று காலை முதலே சென்னையின் ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகலுக்கு பின்னர் மழை பெய்ய துவங்கியது. லேசான சாரல் மழையாக துவங்கி ராயப்பேட்டை, மயிலாப்பூர், தேனாம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கனமழை வெளித்து வாங்கியது.
ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்தது. மேலும் கருமேகங்கள் சூழ்ந்து வானம் இருண்டு காணப்பட்டது. ஊரடங்கால் வெறிச்சோடியிருந்த போதும், சாலையில் சென்ற ஒரு சில வாகனங்களும் முகப்பு விளக்கை எரியவிட்டபடி சென்றன.
கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் திடீரென பெய்த மழையால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.