அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதிசெய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தியுள்ளார்.
இதைத் தொடர்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.தமிழகத்தில், அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை உறுதி செய்ய
27 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் கொண்ட 9 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மத்திய-மாநில ஒருங்கிணைப்புக் குழு, மாநில-மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு, போக்குவரத்து ஒருங்கிணைப்புக் குழு, சுகாதார ஒருங்கிணைப்புக் குழு என தலா 3 ஐஏஎஸ் அதிகாரிகள் 9 குழுக்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த குழுக்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை மேற்கொண்டார். அமைச்சர்கள், தலைமைச் செயலாளர், டிஜிபி உள்ளிட்டோர் இதில் கலந்துகொண்டனர்.
அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வழிவகை செய்வது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டது. ஏற்கெனவே எடுக்கப்பட்ட, புதிதாக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள், நேரக்கட்டுப்பாடு, மக்கள் கூட்டம் சேருவதை தடுப்பது உள்ளிட்டவை குறித்து இதில் ஆலோசிக்கப்பட்டுள்ளன. எனவே இன்று மேலும் முக்கிய அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.