கொரோனா தடுப்பு நடவடிக்கைக்கு ஊரடங்கு போட்டாலும், அதனால் நமக்கென்ன என்பது போல் வழக்கமாக இயங்கி வருகின்றனர் வட சென்னை பகுதி மக்கள்....
ஒன்று கூடி கூட்டமாக அன்பாக வாழும் மக்கள், நெரிசலான தெருக்களிலும் அடுத்தடுத்து வீடு...இது வட சென்னையின் அடையாளம்.
ஊரடங்கு உத்தரவின் 5-வது நாள் ஞாயிற்று கிழமையான இன்று வழக்கமான விடுமுறை நாளாகவே நினைத்து வெளியில் உலாவினர். அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் வருபவர்களை விட, கடைத் தெருவில் நின்று கதை பேசிக்கொண்டும், வேடிக்கை பார்த்துக் கொண்டும் இருக்கும் கூட்டம் தான் அதிகம்
பழைய வண்ணாரப்பேட்டையில் உள்ள காய்கறி சந்தையில் காவலர் ஒருவர் தொண்டை நீர் வற்ற வற்ற, சமூக விலகல் பற்றி மைக்கில் கதறி கொண்டிருந்தார். ஆனால் சந்தைக்கு வந்த கூட்டமோ அதை பொருட்படுத்தாமல் அருகேருகே நின்று கொண்டு பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டினர். கடைகளில் ஒரு மீட்டர் இடைவெளியில் வட்டம் போட்டு வரிசையில் நிற்க வைக்க வேண்டும் என்ற எந்த விதியும் இந்த பகுதிகளுக்கு பொருந்தாது என்பது போல இருந்தது இந்த காய்கறி சந்தை.
இதனிடையே, நெரிசலாக மக்கள் வாழும் பகுதி என்பதால் இந்த பகுதியில் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரபடுத்தப்பட்டுள்ளது. தீயணைப்பு துறையின் சிறிய ரக மீட்பு வாகனங்களை கொண்டு தெரு, சந்து என குறுகலான பகுதிகளுக்கு கொண்டு சென்று கிருமி நாசினியை தெளித்து வருகின்றனர்.
சிறிய சந்துகளில் பெரும் சிரத்தை எடுத்து வாகனங்களை கொண்டு கிருமி நாசினியை தெளித்தாலும், வெளியில் சுற்றும் இப்பகுதி மக்களால் அத்தனை பணிகளும் பாழாகிறது என சுகாதாரத்துறையினர் வேதனையை வெளிப்படுத்துகின்றனர்.
சென்னையின் ஒரு பகுதியில் சமூக விலகலின் அவசியத்தை உணர்ந்து வீட்டுக்குள் முடங்கினாலும், ஒரு பகுதி சென்னைவாசிகள் ஊரடங்கிற்கு அடங்காமல் சுற்றுவது அடுத்த நாட்கள் மீது ஐயத்தை ஏற்படுத்துகிறது. இயல்பாகவே சமூக விலகல் சாத்தியபடாத வட சென்னை பகுதியில் நோய் தடுப்பு நடவடிக்கைகளுடன் விழிப்புணர்வும் அவசர அவசியம் என்பதே களத்தின் நிலவரம்