நாடு தழுவிய "மக்கள் ஊரடங்கு" மாபெரும் வெற்றிக்கு, சென்னை மாநகர மக்களும் பெரிதும் ஒத்துழைப்பு அளித்திருந்தனர். மாநகரின் முக்கிய பகுதிகளை கழுகு பார்வையில் பதிவு செய்த போது, ஆள் நடமாட்டம் இல்லாமல் முற்றிலும் முடங்கி, வெறிச்சோடி காணப்பட்டது.
ஒரு கோடிக்கும் மேல் மக்கள் வசிக்கும் மாநகரம் ! - தலைநகரம் சென்னையில் எப்போதும் மக்கள் வேக, வேகமாக செல்வதும், வாகனங்களில் விரைந்து பயணிப்பதையும் பார்த்து பழகிய நமக்கு, " மக்கள் பந்த் " ஒரு புது அனுபவத்தை தந்துள்ளது.
குறிப்பாக, ஞாயிற்றுக்கிழமை வந்து விட்டால், மெரீனா கடற்கரை மக்கள் வெள்ளத்தில் மிதக்கும். ஆனால், கலங்கரை விளக்கம் முதல் நேப்பியார் பாலம் வரை ஆள் நடமாட்டம் இன்றி, வாகனங்கள் எதுவும் ஓடாமல் வெறிச்சோடி கிடந்த காட்சி, கழுகு பார்வையில் பதிவு செய்யப்பட்டது.
சென்னை - பாரிமுனை பகுதியும், சென்னை உயர்நீதிமன்றம் எதிரில் உள்ள நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் சாலையும் முன் எப்போதும் பார்த்திராத காட்சியை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தியது.
எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலையின் முக்கிய அடையாளமான எல்.ஐ.சி., முதல் ஸ்பென்சர் பிளாசா வரையில் உள்ள சாலையில் வாகனங்கள் எதுவும் ஓடவில்லை.
தேனாம்பேட்டை - டி.எம்.எஸ்., முதல் எஸ்.ஐ.டி சின்னல் வரையிலான அண்ணா சாலையும் முடங்கி, வெறிச்சோடி காணப்பட்டது. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை, ஆள் நடமாட்டத்தை காண முடியவில்லை.
சென்டிரல் ரயில் நிலையம் எதிரில் உள்ள பூந்தமல்லி நெடுஞ்சாலை, மற்றும் எழும்பூர் ரயில் நிலையம் எதிரில் உள்ள சாலைகளும் வெறிச்சோடி இருந்தது.
ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையம் திறந்த வெளி கிரிக்கெட் மைதானம் போல காலியாக கிடந்தது. ஆள் நடமாட்டம் இல்லாத நிலையில் பேருந்துகள் மட்டும் வரிசை கட்டி நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.
எப்போதும் பரபரப்பாக இயங்கும் கோயம்பேடு மார்க்கெட்டில் உள்ள அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன. மக்கள் ஊரடங்குக்கு, வியாபாரிகள், முழு ஒத்துழைப்பு கொடுத்திருந்தனர்.
சென்னையின் இதயப்பகுதியாக கருதப்படும் தியாகராய நகர், ரெங்கநாதன் தெரு, உஸ்மான் சாலை மற்றும் பாண்டிபஜார் போன்ற பகுதிகள், எப்போதும் மனித தலைகளாக காட்சி அளிக்கும். ஆனால், மக்கள் ஊரடங்கால் முன் எப்போதும் இல்லாத வகையில், ஆள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடி காட்சி அளித்தது.