சென்னையில் காருக்குள் பேசிக்கொண்டிருந்த காதலர்களை மிரட்டிய காவலர்கள் இருவர் ஐயாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதோடு மட்டுமல்லாமல், மிரட்டி இளம் பெண்ணின் செல்போன் எண்ணை வாங்கிச் சென்று ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய சம்பவம் நடந்துள்ளது. இதன் பின்னணி குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
சென்னை கே.கே நகர் சிவலிங்கபுரம் பகுதியை சேர்ந்தவர் சசி (28). இவர் ஓட்டுனராக பணிப்புரிந்து வருகின்றார். கடந்த 18-ஆம் தேதி இரவு தனது வீட்டருகே காரை நிறுத்தி விட்டு, காருக்குள் தனது காதலியுடன் பேசி கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த கே.கே.நகர் காவல் நிலைய தலைமை காவலர் திலகர் பாபு, காவலர் சிவகுரு இருவரும், சசி வாகனத்தில் காதலியுடன் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துள்ளனர்.
காருக்குள் இருந்த இளைஞர் சசியை கீழே இறங்கச் சொல்லி விசாரணை நடத்த வேண்டும் என சிறுதி தூரம் அழைத்துச் சென்ற தலைமை காவலர் திலகர் பாபு அவர் மீது விபச்சார வழக்கு பதிவு செய்துவிடுவேன் என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. இல்லை என்றால் ஐயாயிரம் கொடுத்தால் விட்டுவிடுதாகவும் கூறியதால், அந்த இளைஞரிடம் பணம் இல்லை என அவரது நண்பரை வரவழைத்து அவரிடம் பணம் வாங்கி ஐயாயிரத்தை லஞ்சமாக கொடுத்துள்ளார்.
ஒரு பக்கம் இளைஞரை மிரட்டி லஞ்சம் வாங்கிக் கொண்டிருக்க, காருக்குள் சென்ற காவலர் சிவகுரு உள்ளே அமர்ந்திருந்த இளம் பெண்ணிடம் ஆபாசமாக பேசிய மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. அந்த பெண்ணிடம் விசாரணைக்காக முகவரி, செல்போன் எண் உள்ளிட்ட விவரங்களையும் கேட்டு வாங்கியுள்ளார் காவலர் சிவகுரு.
அடுத்த நாள் அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு காவலர் சிவகுரு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். அன்று நாள் முழுவதும் அந்த பெண்ணை மிரட்டும் தொணியிலும், ஆபாசமான குறுஞ்செய்தியையும் அனுப்பியதால் அதிர்ச்சியடைந்த இளம்பெண் அவரது காதலர் சசியிடம் கூறியுள்ளார். இதையடுத்து காதலர்கள் இருவரும் உயர் அதிகாரிகளிடம் முறையிடலாம் என கே.கே நகர் காவல் நிலையத்திற்கு சென்ற அவர், ஆய்வாளர் சிவக்குமாரிடம் முறையிட்டுள்ளனர். உடனடியாக இரண்டு காவலர்களையும் வரவழைத்து விசாரித்த போது 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கியதையும் இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஆனால் காருக்குள் அமர்ந்து பேசிய பெருங்குற்றத்தால் காதலர்கள் மீது ((வழக்கு எண் 131/ 2010 )) 75 என்ற சட்டப்பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்து மிரட்டி அனுப்பியுள்ளனர். மறுநாள் தான் இந்த சம்பவம் உளவு பிரிவு போலீசார் மூலம் உயர் அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. இதையடுத்து துறை ரீதியான நடவடிக்கையாக தலைமை காவலர் திலகர் மற்றும் சிவகுரு ஆகிய இருவரும் காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அவர்கள் மீதே வழக்கு பதிந்த ஆய்வாளர் சிவக்குமாரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்