சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக்க தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பேசிய திமுக உறுப்பினர் தாயகம் கவி, உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக்கப்படும் என அறிவித்து ஓராண்டு ஆனபிறகும் அது நிறைவேற்றப்படவில்லை என கூறினார்.
அப்போது குறுக்கிட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், இதுகுறித்து மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியிருப்பதாகவும், அந்த கடிதத்தின் அடிப்படையில், மீண்டும் உச்சநீதிமன்ற முழு அமர்வுக்கு அக்கோரிக்கை கொண்டு செல்லப்படும் என மத்திய அரசு உறுதி அளித்திருக்கிறது என்றும் பதிலளித்தார்.
சட்டப்பேரவையில் பேசிய அதிமுக உறுப்பினர் செம்மலை, உச்சநீதிமன்றம் தனது கிளையை தென்மாநிலங்களில் அமைக்க முடிவு செய்திருப்பதாகவும், அதை தமிழகத்தில் அமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் சி.வி. சண்முகம், உச்சநீதிமன்ற கிளை தொடர்பாக பல்வேறு தவறான தகவல்கள் பரவி வருவதாகவும், ஆனால் உண்மையில் தனது கிளையை வேறு எந்த மாநிலத்திலும் உச்சநீதிமன்றம் அமைக்கவில்லை என்றும் கூறினார்.
கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் உள்ள சிறைச்சாலைகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அதன்படி சிறைச்சாலைகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் கூறினார்.
இதேபோல் சிறைச்சாலைகள் துறை கொள்கை விளக்க குறிப்பில், தமிழக சிறைகளில் 10 கோடி செலவில் செல்போன் ஜாமர் பொருத்தப்பட்டு வருவதாகவும், சட்டத்துறை கொள்கை விளக்க குறிப்பில், திருச்சி, செங்கல்பட்டு அரசு சட்ட கல்லூரிகளில் சுமார் 12 கோடி செலவில் கூடுதல் வகுப்பறைகள் கட்டப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.