வாங்கிய கடனை திரும்பத்தர அவகாசம் கேட்டவரை காரில் கடத்தி சென்ற கும்பல், விசாரிக்க வந்த போலீசாரிடமும் வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல் ஆய்வாளரை தாக்கிய நிலையில், கூண்டோடு கைது செய்யப்பட்டனர்.
சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த பைசுதீன் என்பவர், 6 மாதங்களுக்கு முன்பு மதுரையை சேர்ந்த ராஜா உசேன் என்பவரிடம், வியாபாரத்திற்காக 10 லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளார். இந்த ராஜா உசேன், 1995 குண்டுவெடிப்பு வழக்கில் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வரும் வழியில் பைசுதீனை பார்த்து கடனை திரும்பக் கேட்டுள்ளார்.
கூடுதல் அவகாசம் கேட்ட பைசுதீனை, காரிலிருந்தவர்கள் தாக்கி கடத்தி சென்று ராயப்பேட்டை மணிக்கூண்டு அருகே நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட, தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட கும்பல், காவல் ஆய்வாளர் மோகன் தாசையும் தாக்கிய நிலையில், 5 பேரும் கைது செய்யப்பட்டனர்.