சென்னை மாநகராட்சியில் சொத்து மற்றும் தொழில்வரி சுமார் 150 கோடி ரூபாய் நிலுவையில் உள்ளதாக தெரிவித்துள்ள அதிகாரிகள், மார்ச் 31 ஆம் தேதிக்குள் வரி செலுத்தாவிடில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர்.
மொத்தம் 15 மண்டலங்களில் உள்ள 200 வார்டுகளில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு சொத்து வரியும், வணிகம் சார்ந்து இயங்கும் கட்டிடங்களுக்கு தொழில் வரியும் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பெரு நிறுவனங்கள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகள், நட்சத்திர விடுதிகள் என 150க்கும் மேற்பட்ட நிறுவனங்களும் ஏராளமான குடியிருப்புகளும் 150 கோடி ரூபாய் வரை வரி பாக்கி வைத்துள்ளதாக சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
2019-20ம் நிதியாண்டில் தற்போது வரை 865 கோடி ரூபாய் சொத்து வரியும் 285 கோடி ரூபாய் தொழில் வரியும் வசூலிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.