சிஏஏ-வுக்கு எதிரான தொடர் போராட்டங்களை தடுக்க சட்டப்படி நடவடிக்கை கோரிய வழக்கு, மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை செங்குன்றத்தை சேர்ந்த சையது இப்ராஹிம் என்பவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல மனுவில், அமைதி வழிப் போராட்டங்களுக்கு அரசமைப்புச் சட்டம் உரிமை வழங்கியுள்ள போதும், அதை தவறாக பயன்படுத்துவதை அனுமதிக்க முடியாது எனக் குறிப்பிட்டுள்ளார்.
முன்அனுமதியின்றி ஏராளமானோர் கூடி, மறியலில் ஈடுபடுவது, சட்டம்-ஒழுங்கை பாதிக்கும், இது அபாயகரமானது என மனுதாரர் கூறியுள்ளார். கடந்த பிப்ரவரி 14 முதல் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்களை சட்டப்படி தடுக்காவிட்டால் நிலைமை கைமீறிச் சென்று விடும் எனவும் மனுதாரர் அச்சம் தெரிவித்துள்ளார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், கிருஷ்ணன் ராமசாமி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, ஏற்கெனவே நிலுவையில் உள்ள வழக்குடன் சேர்த்து மார்ச் 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.