கொரான அச்சுறுத்தல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் பல்வேறு கட்ட பரிசோதனைகளுக்கு உட்படுத்தப் படுகின்றனர். உள்நாட்டு முனையத்திலும் பரிசோதனை மையங்களை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பல்வேறு நாடுகளிலிருந்து வரும் பயணிகள் விமான நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள பிரத்யேக சிறப்பு மையத்திற்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.
அங்கு அவர்களுக்கு கொடுக்கப்படும் படிவம் ஒன்றில் அவர்களுடைய பெயர், சொந்த ஊர், எந்த நாட்டிலிருந்து திரும்புகின்றனர், அங்கு சென்று எத்தனை நாட்கள் ஆகின்றன, என்ன மாதிரியான பணிக்காக அங்கு சென்றனர், எந்த நிறுவனத்தின் சார்பில் சென்றனர், சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏதேனும் உள்ளனவா என பல்வேறு முக்கிய தகவல்களை அதில் நிரப்ப வேண்டும்.
படிவத்தில் நிரப்பப்படும் தகவல்களைப் பொறுத்து, அனைவருமே தெர்மல் ஸ்கிரீனிங் என்ற சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். குறிப்பாக கடந்த 28 நாட்களுக்குள் சைனா, ஹாங்காங்க், கொரியா, இத்தாலி, ஈரான், ஜப்பான் உள்ளிட்ட கொரானா பாதிப்பு கொண்ட நாடுகளில் ஏதேனும் ஒன்றுக்கு சென்று வந்தவரா என்ற விவரம் கேட்கப்படுகிறது.
அவ்வாறு இருந்தால் அவர்கள் கட்டாயமாக தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். பயணிகள் அனைவரும் ஆங்காங்கே வைக்கப்பட்டு இருக்கும் “ஹேண்ட் சானிடைசர்” கருவிக்கு நேரே கைகளை நீட்டினால் வரும் கிருமி நாசினி திரவத்தைக் கொண்டு 16 வினாடிகளுக்கு கைகளை சுத்தம் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
தெர்மல் ஸ்கிரீனிங் பரிசோதனையின்போது, யாருக்கேனும் காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் பிரச்சனை இருப்பது கண்டறியப்பட்டால் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கும் வகையில் விரிவான ஏற்பாடுகளை சுகாதாரத்துறை செய்துள்ளது.
அதேசயம், சர்வதேச முனையத்தில் செய்யப்பட்டுள்ள இந்த பரிசோதனை ஏற்பாடுகளை உள்நாட்டு முனையத்திலும் விரிவுபடுத்த வேண்டும் என பயணிகள் கூறுகின்றனர்.
கொரானா குறித்த வீண் அச்சம் வேண்டாம் என்றும் அதேசமயம் அலட்சியமும் வேண்டாம் எனவும் எச்சரிக்கும் தமிழக அரசு, கொரானா தொற்று பரவாமல் தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம் என்றும் அறிவுறுத்துகிறது.