சென்னை மெட்ரோ ரயில்களில் சமைக்கப்படாத இறைச்சி, மீன் போன்ற கடல் உணவுகளை எடுத்துச் செல்வது தடை செய்யப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்வே கேரேஜ் டிக்கெட் விதிகள் 2014ன் படி, சமைக்கப்படாத மீன், இறைச்சி போன்றவை, விலங்குகள் மற்றும் பறவைகளின் சடலங்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளதால், அவை தடை செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த விதிகளை மட்டுமே தாங்கள் பின்பற்றுவதாகவும் மெட்ரோ ரயில் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் மெட்ரோ ரயிலில், பயணி ஒருவர் நன்கு பேக் செய்யப்பட்ட சமைக்கபடாத மீனை கொண்டு சென்ற போது தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து இந்த விதிகள் குறித்து தெரியவந்துள்ளது.
அதே போல் மெட்ரோ ரயில் மற்றும் ரயில் நிலையங்களில் சமைக்கப்பட்ட உணவுகளை கொண்டு செல்ல அனுமதி இருந்தாலும் அவற்றை ரயிலில் சாப்பிட அனுமதியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.