சென்னை மாதவரம் அருகே மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படும் நபர், தனது 4 வயது மகளுடன் மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பொன்னியமன்மேடு சாமி நகரைச் சேர்ந்த திருப்பதி ரெட்டி என்ற அந்த நபர், பாரிமுனையில் உள்ள கடை ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார். கடந்த ஓராண்டு காலமாக மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு மதுரவாயலிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்படுகிறது.
சில தினங்களுக்கு முன் வீடு திரும்பிய திருப்பதி ரெட்டி, மாத்திரை மருந்துகளை சரிவர எடுத்துக் கொள்ளாமல் இருந்துள்ளார்.
இந்த நிலையில், திங்கட்கிழமை திடீரென தனது 4 வயது மகள் ஹரிகாவைத் தூக்கிக்கொண்டு 3வது மாடிக்குச் சென்றவர், அங்கிருந்து குதித்ததாகச் சொல்லப்படுகிறது. சம்பவ இடத்திலேயே இருவரும் உயிரிழந்த நிலையில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.