சீனாவில் இருந்து சென்னை வந்த கப்பலில் கொரோனா அறிகுறியுடன் இருந்ததாகக் கூறப்பட்ட 2 சீனர்களுக்கு பாதிப்பு இல்லை எனத் தெரியவந்துள்ளது.
ஏற்கனவே வெளியிடப்பட்ட சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக செய்திக்குறிப்பில் சீனாவில் இருந்து 18-ஆம் தேதி சென்னை வந்த எம்.வி. மேக்னட் கப்பலில் 19 சீனர்கள் இருந்ததாகவும், அவர்களில் இருவருக்கு லேசான காய்ச்சல் இருந்தாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
கப்பலிலேயே தனிமைப்படுத்தப்பட்டு, அவர்களின் ரத்த மாதிரிகள் கிண்டி கிங்ஸ் நிறுவனத்துக்கு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதாகவும் கூறப்பட்டிருந்தது. இந்நிலையில் தமிழக அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை செய்திக்குறிப்பில் சீனர்கள் இருவரின் ரத்த மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் அவர்களுக்கு பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.