தைப்பூசத் திருநாள் இன்று விமர்சையாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தமிழகம் முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் அதிகாலை முதலே பக்தர்கள் குடும்பத்துடன் வழிபாடு செய்தனர்.
தமிழ் கடவுள் முருகப் பெருமானுக்கு உகந்த நாளாக தைப்பூசம் கருதப்படுகிறது. அதையொட்டி பக்தர்கள் காலையிலேயே கோவிலுக்கு சென்று காவடி எடுத்து வேல் பூஜை செய்து தங்களது பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார்கள்.
இன்று தைப்பூசத்தையொட்டி, சென்னை வடபழனியில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் காலை 4 மணி முதலே பக்தர்கள் பால்குடம் மற்றும் காவடி எடுத்து வந்து ஸ்வாமி தரிசனம் செய்தனர்.
கடலூர் மாவட்டம் வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் 7 திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டும் நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
இறைவன் ஒளி வடிவில் உள்ளார் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் அவர் நிறுவிய சத்திய ஞான சபையில் ஆண்டுதோறும் தைப்பூச தினத்தில் ஏழு திரைகள் நீக்கி 6 காலங்கள் ஜோதி தரிசனம் காட்டப்படும். அதன்படி இன்று காலை 6 மணிக்கு முதல்கால ஜோதி தரிசனம் துவங்கியது.
ஏழு திரைகள் நீக்கி ஜோதி தரிசனம் காட்டப்பட்டது. அப்போது அதிகாலையிலேயே காத்திருந்த பக்தர்கள், ‘அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை’ என்ற மகா மந்திரததை முழங்கி ஜோதி தரிசனம் செய்தனர்.