குடியரசு தினத்தையொட்டி சென்னையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தேசியக் கொடியேற்றுகிறார். இதையொட்டி வீரர்களின் அணிவகுப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.
நாடு முழுவதும் இன்று குடியரசு தினம் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை அருகே இன்று காலை 8 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தேசியக்கொடியேற்றுகிறார்.
முப்படை வீரர்கள், தமிழக காவல்துறையினர், என்.சி.சி. மாணவர்கள் உள்ளிட்ட 48 படைப் பிரிவினரின் கண்கவர் அணிவகுப்பு நடைபெறுகிறது.
இதனைத் தொடர்ந்து, வீரதீர செயலுக்கான அண்ணா பதக்கம், கோட்டை அமீர் மத நல்லிணக்க பதக்கம், காந்தியடிகள் காவலர் பதக்கம் மற்றும் அதிக உற்பத்தி திறன் பெறும் விவசாயிக்கான வேளாண்மை துறை சிறப்பு விருது ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வழங்குவார்.
இதன்பின்னர் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ - மாணவிகளின் ஆடல், பாடல் கலை நிகழ்ச்சிகள், கிராமிய கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. தமிழக அரசின் பல்வேறு துறைகளின் அலங்கார ஊர்திகள் அணிவகுப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் ஒரு லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். சென்னையில் மட்டும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
சென்னையில் விமான நிலையம், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் மக்கள் கூடும் இடங்களில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில் நிலையங்களுக்கு வரும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனைக்கு பிறகு கொண்டு செல்ல அனுமதிக்கப்படுகிறது. அதேபோன்று, சென்னை நகருக்குள் வரும் அனைத்து வாகனங்களும் போலீசாரின் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகின்றன.