திருச்சியில், உறவினர் பெண்ணுடன் தொடர்பில் இருந்த இளைஞரை கொலை செய்த வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவரை, பேருந்தில் இருந்து தள்ளிவிட்டு பட்டப்பகலில் ஒரு கும்பல் வெட்டி சாய்த்துள்ளது.
திருச்சி மாவட்டம் ஜீயபுரம் அடுத்து கொடியாலம் மாரியம்மன் கோவில் வசிப்பவரின் கணபதியின் 19 வயது மகன் விஷ்ணு. ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றிவந்த விஷ்ணு, வெள்ளிக்கிழமை காலை 9 மணியளவில், கொடியாலத்தில் இருந்து அரசு பேருந்தில் சத்திரம் பேருந்து நிலையம் நோக்கி சென்றுள்ளார். பேருந்து கொடியாலம் அடுத்து திண்டுக்கரை ரயில்வேகேட் அருகே சென்றபோது பின்பக்க படிக்கட்டில் நின்றுள்ளார் விஷ்ணு. அப்போது ஹெல்மெட் அணிந்தபடி 2 பைக்கில் வந்த 5 பேர் கொண்ட கும்பலில் ஒருவர் பேருந்திற்குள் ஏறி விஷ்ணுவை காலால் எட்டி உதைத்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது.
கீழே விழுந்த விஷ்ணுவை, 5 பேர் கொண்ட கும்பல் கண்ணிமைக்கும் நேரத்தில் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சாரமாரியாக வெட்டிவிட்டு தப்பியதாக கூறப்படுகிறது.
வெட்டப்பட்டதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த விஷ்ணு சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை அறிந்த ஜீயபுரம் போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விஷ்ணு உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார், மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
சம்பவ இடம் மற்றும் அரசு பேருந்தில் பதிவாகியுள்ள கைரேகை பதிவுகளை ஆய்வு செய்துள்ள போலீசார், குற்றவாளிகளை அடையாளம் காணும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
விசாரணையில், தனது உறவினர் பெண்ணுடன் தகாத உறவில் இருந்த கொடியாலம் பகுதியை சேர்ந்த கோகுல் என்பவரை கொலை செய்த வழக்கில் கைதான விஷ்ணு, கடந்த வாரம் சிறையில் இருந்து வெளியே வந்தது தெரியவந்துள்ளது. கோகுல் கொலை செய்யப்பட்டு சரியாக ஒரு ஆண்டு முடிந்த நிலையில், விஷ்ணு கொலை செய்யப்பட்டுள்ளதால், பழிக்குப்பழியாக இக்கொலை நடந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
கோகுலின் நண்பர்களை பிடித்து விசாரித்துவரும் போலீசார், கொலை நடந்த இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளைக்கொண்டும் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். பட்டப்பகலில் பேருந்தில் சென்ற இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் ஜீயபுரம் பகுதியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.