விலை உயர்ந்த கார்களை கள்ளச்சாவி போட்டு திறந்து திருடிச்சென்று, நம்பர் பிளேட்டை மாற்றி ஆன்லனில் விளம்பரம் செய்து விற்று மோசடி செய்ததாக 8 பேரை சென்னை ராயபுரம் போலீசார் கைது செய்துள்ளனர்.
தேனியைச் சேர்ந்த ராஜபாண்டியன் என்பவர் தனது பெயரை டேவிட் செபஸ்டின் என மாற்றி சென்னை, ராயபுரத்தை சேர்ந்த கார்த்திக்கிடம் ஆன்லைனில் 2 மாதங்களுக்கு முன்பு கார் ஒன்றை விற்றுள்ளார். தான் வாங்கிய காரை ரிப்பேர் செய்து விற்பனைக்காக கார்த்திக் ஆன்லைனில் விளம்பரம் செய்த போது, அது திருட்டுக்கார் என்பது தெரியவந்துள்ளது.
இது குறித்து ராஜபாண்டியனிடம் கார்த்திக் கேள்வி எழுப்பிய நிலையில், அவரது வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காரை, ஜி.பி.எஸ் கருவி மூலம் கண்டறிந்த ராஜபாண்டியன் கள்ளச்சாவி போட்டு திருடிச் சென்றது தெரியவந்தது.
இதனையடுத்து அவரையும், அவரது கூட்டாளிகளையும் கைது செய்த போலீசார், அக்கும்பலிடம் இருந்து விலை உயர்ந்த 3 கார்கள், 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் பறிமுதல் செய்தனர்.