சென்னையில், பைக் மீது மோதிவிட்டு காரை நிறுத்தாமல் சென்ற தொழிலதிபரை பிடிக்கும் முயற்சியில் தலைமை காவலர் ஒருவருக்கு 2 கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது.
திருவான்மியூர் அருகே, பைக் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற ஹுண்டாய் அல்கசர் காரை போலீசார் நிறுத்த முயன்றபோது, ஓட்டுநர் நிற்காமல் சென்றதாக சொல்லப்படுகிறது.
ஓடிச்சென்று கார் கதவை திறந்து முன் இருக்கையில் அமர்ந்த தலைமை காவலர் தர்மர், காரை ஓரமாக நிறுத்த சொன்னபோது, ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்திருந்த ஹரிஷ் என்பவர், தப்பிக்கும் நோக்கில் அதிவேகத்தில் காரை ஓட்டிச்சென்று மண்டபம் ஒன்றின் தடுப்புச்சுவரில் மோதியதாக கூறப்படுகிறது.
மோதிய வேகத்தில் ஏர்பேக் வெளியே வந்ததால், ஹரிஷும், தர்மரும் உயிர் தப்பினர். பின் இருக்கையில் அமர்ந்திருந்த மணி என்பவர் படுகாயமடைந்தார்.
லெக்ரூமில் சிக்கி இரண்டு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்ட தர்மருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்துவருகின்றனர்.