சென்னை எண்ணூரில் அம்மோனியா வாயுக் கசிவு ஏற்பட்ட தனியார் நிறுவனத்தை தற்காலிகமாக மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடலுக்கு அடியில் இருந்து கோரமண்டல் உரத் தொழிற்சாலைக்கு அமோனியா கொண்டு வரும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக நேற்றிரவு வாயுக் கசிவு ஏற்பட்டது.
மூச்சுத்திணறலால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆலை பகுதியில் காற்றில் 400 மைக்ரோ கிராமாக இருக்க வேண்டிய அமோனியா, 2 ஆயிரத்து 90 மைக்ரோகிராமாகவும் கடலில் 5 மில்லிகிராமாக இருக்க வேண்டிய அமோனியா, 49 மில்லிகிராமகவும் இருப்பதாக கண்டறிந்த மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், இனி தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் ஒப்புதலோடு மட்டுமே குழாயை இயக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
வாயுக்கசிவு குறித்து அமைக்கப்பட்டுள்ள குழு விரைவில் விசாரணை நடத்தி அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசும் விளக்கமளித்துள்ளது.
இதனிடையே வாயுக் கசிவு ஏற்பட்ட இடத்தில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர். இச்சம்பவம் குறித்து தாமாக முன்வந்து விசாரிக்கவுள்ளதாக அறிவித்துள்ள தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் வழக்கை வரும் ஜனவரி 2ஆம் தேதிக்கு பட்டியலிட்டுள்ளது.