தனிப்பட்ட திரிஷா கிருஷ்ணனை தான் விமர்சிக்கவில்லை என நடிகர் மன்சூர் அலி கான் கூறினார். ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி 35 நிமிடங்கள் விளக்கம் அளித்த பின் பேட்டியளித்த மன்சூர், நடிகையாக திரிஷாவை மிகவும் மதிப்பதாக தெரிவித்தார்.
லியோ படத்தில் திரிஷாவுடன் ஒன்றாக நடிக்காது பற்றி மன்சூர் அலி கான் பேட்டி ஒன்றில் தெரிவித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. இது தொடர்பாக மகளிர் ஆணைய உத்தரவின் பேரில் மன்சூர் அலி கான் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனிடையே, இவ்வழக்கில் முன்ஜாமீன் கேட்டு மன்சூர் அலி கான் சார்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஆயிரம் விளக்கு காவல் நிலையம் என்பதற்கு பதில் நுங்கம்பாக்கம் காவல் நிலையம் என்று மன்சூர் தரப்பில் தவறாக குறிப்பிடப்பட்டது.
அதற்கு, நீதிமன்றம் விளையாட்டு மைதானம் அல்ல என்றும் நீதிமன்ற நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனவும் சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ். அல்லி கண்டனம் தெரிவித்தார்.
இதையடுத்து மன்சூர் தரப்பில் மனு விவரங்களை சரி செய்து தாக்கல் செய்தனர். அதன் மீது வெள்ளியன்று விசாரணை நடைபெற உள்ளது.