ஆவடி ரயில் நிலையம் அருகே சென்னை கடற்கரை செல்ல வேண்டிய புறநகர் மின்சார ரயிலின் நான்கு பெட்டிகள் இன்று அதிகாலை 5.40 மணிக்கு தடம் புரண்டன.
இதனால், சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் பல புறநகர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்களின் சேவை பாதிக்கப்பட்டது.
எக்ஸ்பிரஸ் ரயில்கள் செல்லக்கூடிய மெயின் லைனில் மின் கேபிளில் பாதிப்பு ஏற்பட்டதால், பல ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன. வந்தே பாரத், சதாப்தி, கோவை எக்ஸ்பிரஸ் மாற்றுப் பாதையில் இயக்கப்பட்டன.
சப்தகிரி, பிருந்தாவன், டபுள் டெக்கர் எக்ஸ்பிரஸ் ரயில்களின் நேரம் மாற்றி இயக்கப்பட்டன. தடம் புரண்ட ரயிலை மீட்பதிலும், பாதிக்கப்பட்ட ரயில் பாதையை சீரமைக்கும் பணியிலும் ரயில்வே பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
விபத்து நேர்ந்த இடத்தில் தெற்கு ரயில்வே கூடுதல் பொது மேலாளர் கௌசல் கிஷோர் ஆய்வு மேற்கொண்டார். ரயில் ஓட்டுநரின் கவனக்குறைவு காரணமாக விபத்து நேர்ந்ததாகவும், மீட்புப் பணிகள் துரிதமாக நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.