ஐதராபாத்திலிருந்து சென்னைக்கு வந்துக் கொண்டிருந்த ரயில் பயணிகளிடம் நள்ளிரவில் கொள்ளையர்கள் நகை பணத்தை கொள்ளையடித்தனர்.
ஆந்திராவின் சிங்கராய கொண்டா பகுதியில் மெதுவாகச் சென்ற ரயிலில் ஏறிய கொள்ளையர்கள் 6 பெட்டிகளில் கொள்ளையடித்ததாக கூறப்படுகிறது.
பிடிக்க முயன்ற சிலரை தாக்கி விட்டு அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தி தப்பியோடியதாக கூறப்படுகிறது. 7 பேரிடம் நகை பறிக்கப்பட்ட நிலையில் சென்னை சென்ட்ரல் இருப்பு பாதை காவல் நிலையத்தில் 3 பேர் புகார் அளித்தனர்.
ஓங்கோல்- காவாலி ரயில் நிலையத்திற்கு இடையிலான காட்டுப்பகுதி கொள்ளையர்கள் தண்டவாளத்தில் பெரிய கற்களை வைத்து விடுவார்கள் என்பதால் இரவு நேரத்தில் கூடுதல் எச்சரிக்கையுடன் மெதுவாக ரயில்கள் இயக்கப்படுகிறது.
இதனை கொள்ளையர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்வதாக கூறிய போலீஸார், கொள்ளை குறித்த புகாரை ஆந்திர மாநில ரயில்வே போலீசாருக்கு மாற்றியுள்ளதாக தெரிவித்தனர். ஐதராபாத்- தாம்பரம் சார்மினார் விரைவு ரயிலிலும் கொள்ளை முயற்சி நடந்ததாகவும், ரயில்வே போலீசார் அதனை முறியடித்ததாகவும் கூறப்படுகிறது.