சென்னையில் உள்ள முக்கிய வழித்தடங்களில் காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படாததால் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிகட்டுகளில் தொங்கியபடியே பயணிக்கும் நிலை நீடிக்கிறது. போக்குவரத்து மிக்க பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் மாணவர்களின் பேருந்து சாகசங்கள் அதிகரித்து காணப்படுகிறது. இதே போன்றுதான் பெரம்பூர் - பெசன்ட் நகர் , பாரிமுனை - கொரட்டூர் , பாரிமுனை கண்ணதாசன் நகர் ரூட் பேருந்துகளிலும் அதிகளவிலான மாணவர்கள் தொங்கிச் செல்கின்றனர்.
பேருந்தில் தொங்குவதற்கு இடம் கிடைக்காத வருத்தத்தில் மாணவர்கள் சிலர் தண்ணீர் கேன் ஏற்றி வரும் டாடா ஏஸ் வாகனத்தின் பின்பக்க கதவை பிடித்தபடி பயணிக்கின்றனர்.
படிக்கட்டில் தொங்குவது குறித்து மாணவர்களிடம் தட்டி கேட்டால் ஓட்டுரும் , நடத்துநரும் தாக்கப்படுவதாக, போக்குவரத்து ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதுபோன்ற அனைத்து அசெளகரியங்களையும் தவிர்க்க, காலை மாலை நேரங்களில் கூடுதல் பேருந்து இயக்கவேண்டும் அல்லது இரு வாசல்களிலும் கதவு பொருத்திய பேருந்து இயக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.