வரத்து குறைவு காரணமாக சென்னையின் புறநகர் பகுதிகளில் தக்காளி விலை கிலோ 210 ரூபாயை தொட்டிருக்கும் நிலையில் கிலோ 250 ரூபாயை எட்டுவதற்கான வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஏப்ரல் மாதம் கிலோ 10 ரூபாய்க்கு விற்ற தக்காளி, தற்போது கோயம்பேடு சந்தையில் மொத்த விற்பனையில் கிலோ 160 ரூபாயை எட்டியுள்ளது.
இதனையடுத்து, மாநகரப் பகுதிகளிலுள்ள சில்லறை விற்பனை கடைகளில் கிலோ 180 ரூபாய் முதல் 190 ரூபாய் வரை விற்கப்படும் தக்காளி, சென்னையின் புறநகர்ப் பகுதிகளில் கிலோ 200 ரூபாய் முதல் 210 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
வெளிமாநிலங்களில் இருந்து கோயம்பேடு சந்தைக்கு நாளொன்று ஆயிரத்து 200 டன் தக்காளி வரும் என்று கூறும் வியாபாரிகள், கனமழை உள்ளிட்ட காரணங்களால் தற்போது 300 டன் அளவுக்கே வரத்து உள்ளதாகக் கூறுகின்றனர்.
வரலாறு காணாத விலை உயர்வால், சமையலில் தக்காளிக்குப் பதிலாக புளி உள்ளிட்டவற்றை சேர்த்து சமைக்கப் பழகிவிட்டதாக இல்லத்தரசிகள் கூறுகின்றனர்.
மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்தால் மட்டுமே விலையை கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று வியாபாரிகள் கூறுகின்றனர்.