முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளில் நீதிமன்ற விசாரணையை தொடங்க இசைவு ஆணையை வழங்க கோரி ஆளுனருக்கு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கடிதம் எழுதி உள்ளார்.
சி. விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா தொடர்புடைய குட்கா வழக்கை விசாரிக்கும் சி.பி.ஐ., நீதிமன்ற விசாரணை தொடங்க இசைவு ஆணையை கோரி இருப்பதாக கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார். சி.பி.ஐ.யின் கோரிக்கையை மாநில அமைச்சரவை ஆளுநர் அலுவலகத்துக்கு கடந்த ஆண்டு அனுப்பிய நிலையில் எந்த பதிலும் கிடைக்காததால் வழக்கில் மேல் நடவடிக்கை எடுக்க முடியவில்லை என ரகுபதி தெரிவித்துள்ளார்.
அதேபோல், மற்றொரு வழக்கில் கே.சி. வீரமணி மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்க ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் இசைவு ஆணை கோரிய நிலையில் அது குறித்த கடிதங்களும் நிலுவையில் உள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தவிர, பேரவையில் நிறைவேற்றப்பட்ட 13 மசோதாக்கள் மீதும் தனி கவனம் செலுத்தி ஒப்புதல் வழங்குமாறும் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தில் அமைச்சர் ரகுபதி வலியுறுத்தியுள்ளார்.