சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றான அண்ணா மேம்பாலம் கட்டப்பட்டு 50 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனை புதுப்பிக்கும் பணிகள் மூழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
1971-ஆம் ஆண்டு 66 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டுமானம் தொடங்கப்பட்ட அண்ணா மேம்பாலம், பணிகள் முடிந்து 1973-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒன்றாம் தேதி அப்போதைய முதலமைச்சர் கருணாநிதியால் பொது போக்குவரத்திற்கு திறந்து வைக்கப்பட்டது. அண்ணா மேம்பாலம் இந்தியாவில் கட்டப்பட்ட மூன்றாவது சாலை மேம்பாலமாகவும், தமிழ்நாட்டின் முதல் மேம்பாலமாகவும் திகழ்கிறது.
50 வயதை கடந்துள்ள அண்ணா மேம்பாலத்தில் தற்போது சராசரியாக ஒரு மணி நேரத்தில் 20 ஆயிரம் வாகனங்கள் கடப்பதாக கூறப்படுகிறது. இன்றும் உறுதியாக காணப்படும் அண்ணா மேம்பாலத்தை புதுப்பித்து அழகுப்படுத்தும் பணிகள் 8 கோடியே 80 லட்ச ரூபாய் மதிப்பில் மாநில நெடுஞ்சாலை துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பல வரலாற்று நினைவுகளை சுமந்து நிற்கும் அண்ணா மேம்பாலம் மேலும், பல ஆண்டுகள் போக்குவரத்துக்கு பேருதவியாக திகழும் வகையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.