சென்னையில் வங்கியில் கடன் வாங்கி தருவதாக கூறி 10 லட்ச ரூபாய் மோசடி செய்த போலி என்.ஐ.ஏ. அதிகாரியை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை ராமாபுரத்தை சேர்ந்த விஜயகுமார், கட்டிடத்திற்கு பட்டி பார்க்கும் தொழில் செய்து வரும் நிலையில் 2016 ஆம் ஆண்டு தொழிலை மேம்படுத்த வங்கி கடனுக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.
அப்போது தன்னை பொருளாதார குற்றப்பிரிவு துணை கண்காணிப்பாளர் எனக் கூறி அறிமுகமான பாலாஜி என்ற நபர் கடந்த 6 ஆண்டுகளில் 10 லட்ச ரூபாய் வரை விஜயகுமாரிடம் பெற்றுள்ளார்.
இந்நிலையில், என்ஐஏ அதிகாரியாக பதவி உயர்வு பெற்று டெல்லி செல்ல இருப்பதாக பாலாஜி கூறியதால், விஜயகுமார் தனது பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அப்போது பணத்தை கேட்டால் சுட்டுவிடுவேன் என பாலாஜி கூறியதாக விஜயகுமார் போலீசில் புகார் அளித்தார்.
இதன்பேரில் பாலாஜி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து பல்வேறு போலி அடையாள அட்டைகள் கைப்பற்றப்பட்டன.