சமூக தீங்காக உள்ள ஆன்லைன் விளையாட்டுக்களால் மரணங்கள் நிகழ்வதாலும், குடும்பங்கள் வறுமையில் வாடுவதாலும் அவற்றை தடை செய்வதில் என்ன தவறு உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது.
தமிழக அரசு கடந்த மார்ச் 23ம் தேதி தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டுகள் முறைப்படுத்தல் சட்டத்தை இயற்றி உள்ளது. இச்சட்டத்தை எதிர்த்து 69 ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய விளையாட்டு கூட்டமைப்பு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், மக்கள் நலன் தான் மிக முக்கியம் என்பதால், தமிழ்நாடு அரசுத்தரப்பில் பதிலளிக்காமல் வழக்கில் எந்த ஒரு இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது என மறுப்பு தெரிவித்தனர். மேலும், தமிழக அரசு 6 வாரங்களில் இதுகுறித்து பதிலளிக்கும்படி உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 3ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.