சினிமா பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கிய விவகாரத்தில் தேடப்பட்டு வந்த ஹரிஷ் மற்றும் இடைத்தரகரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில், சர்வதேச ஊழல் தடுப்பு மற்றும் மனித உரிமை கவுன்சில் என்ற அமைப்பு சார்பில் 50 பேருக்கு வழங்கப்பட்ட கௌரவ டாக்டர் பட்டம் போலியானது என்பது அம்பலமானதை அடுத்து, நிகழ்ச்சி நடத்திய ஹரிஷ் மற்றும் ஏற்பாட்டாளர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை தேடி வந்தனர்.
நிகழ்ச்சி முடிந்த மறு தினமே ஹரிஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்ட நிலையில், அவரது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்ற தனிப்படை போலீசார், அங்கு கிடைத்த தகவலை வைத்து, ஆம்பூரில் பதுங்கியிருந்த ஹரிஷையும், இடைத்தரகர் குட்டி ராஜாவையும் கைது செய்தனர்.