சென்னையில் நீதிபதி ஒருவரின் வீட்டில் 450 சவரன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்ற நபரை, 7 ஆண்டுகள் கழித்து சென்னை விரல் ரேகை பிரிவு போலீசார் NAFIS என்ற மென்பொருள் உதவியோடு கண்டுபிடித்துள்ளனர்.
கடந்த 2016-ஆம் ஆண்டு கோட்டூர்புரம் காவல் பகுதியில் உள்ள நீதிமன்ற குடியிருப்பில் நீதிபதி ஒருவரின் வீட்டில் நகைகள் கொள்ளை போயின. கொள்ளை நடந்த இடத்தில் உள்ள 10 கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் குழு கைப்பற்றி விசாரணை மேற்கொண்டது.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் தமிழ்நாட்டில் குற்றவாளிகளின் கைரேகை விரல் பதிவுகள் NAFIS எனப்படும் மென்பொருளில் பதிவேற்றம் செய்யப்பட்டது. இதன்மூலம் ஏழு வருடத்திற்கு பிறகு 10 கைரேகை பதிவுகளை வைத்து, அதே பேட்டனில் உள்ள கைரேகை யாருடன் பொருந்துகிறது என ஒப்பிட்டுப் பார்த்து, கொள்ளையன் ஒருவனை அடையாளம் கண்டுபிடித்துள்ளனர்.
வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளதால் இது தொடர்பான தகவல் சிபிசிஐடி விசாரணை அதிகாரிக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும், கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட கொள்ளையனை சம்பந்தப்பட்ட மாநில போலீசார் உதவியுடன் கைது செய்ய சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது