சென்னை எருக்கஞ்சேரியில் பெற்ற மகளால் அடித்து கொடுமைப்படுத்தப்பட்ட 80 வயதான மூதாட்டியை போலீசார் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். உடல்நலம் குன்றிய சந்திரா எனும் மூதாட்டி, தனது மகள் தனலட்சுமி வீட்டில் வசித்து வந்தார்.
தனலட்சுமி தனது கணவருடன் சேர்ந்து, தினமும் மூதாட்டியை அடித்து துன்புறுத்துவதாக வீடியோ ஆதாரத்துடன் சென்னை காவல்துறையின் காவல் கரங்கள் பிரிவுக்கு புகார் வந்தது.
புகாரின் பேரில் போலீசாரும் தனியார் காப்பகத்தைச் சேர்ந்தவர்களும் மூதாட்டியை மீட்கச் சென்ற போது, தனது தாயை பார்த்துக் கொள்ள நீங்கள் யார் என தனலட்சுமி வீராப்பாக பேசியுள்ளார்.
பின்னர், மூதாட்டியை தாக்கிய வீடியோவை காண்பித்து போலீசார் எச்சரித்ததும், தனலட்சுமி மூதாட்டியை அழைத்துச் செல்ல ஒப்புக் கொண்ட நிலையில், போலீசார் மூதாட்டியை மீட்டனர்.
சென்னை காவல் துறையில் செயல்படும் காவல் கரங்கள் பிரிவு, ஆதரவற்றோர், மனநலம் பாதிக்கப்பட்டு புலம்பெயர்ந்து சாலையில் திரிபவர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களை மீட்டு காப்பகங்களிலும், உரியவர்களிடமும் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறது.