கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலையில் 2 ஆயிரத்து 668 அடி உயர மலைஉச்சியில் இன்று மகாதீபம் ஏற்றப்படுவதால்,பக்தர்கள் திரண்டவண்ணம் உள்ளனர்.
ஒளிவடிவானவன் இறைவன் என்பார்கள் சிவனடியார்கள். கார்த்திகை மாதத்தில்தான், எல்லாம் வல்ல ஆவுடையார் சிவபெருமான் ஒளிப்பிழம்பாக வெளிப்படுவதாக ஐதீகம்..
கார்த்திகை மாதத்தில், கிருத்திகை நட்சத்திரமும், பவுர்ணமி திதியும் கூடிய நன்னாளான இன்று, நாள் முழுவதும் விரதமிருந்து, மாலையில் வீடுகளில் தீபங்களை ஏற்றி இறைவனை வழிபடுகின்றனர்.
பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகிய திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலின் தீபத்தை, தீபத்திருநாளான இன்று தரிசிப்பதே சிறப்பு என்பார்கள் சிவபக்தர்கள்.
திருவண்ணாமலை கோவிலில் இன்று மாலையில், அர்த்தநாரீஸ்வரர் பக்தர்களுக்கு காட்சி தந்ததும் ஸ்வாமி சன்னதி முன்பு அகண்ட தீபம் ஏற்றப்படும் அதே நேரத்தில், 2 ஆயிரத்து 668 உயர மலை உச்சியில் மகாதீபம் ஏற்றப்படும். மோட்சதீபம் எனப்படும் அண்ணாமலையார் கோவில் தீபத்தை நேரில் காண பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.