திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழாவையொட்டி, இன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளதால் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கடந்த 25ந் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானைக்கு தினமும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்று வருகின்றன.
சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று மாலை நடைபெறுகிறது. தேவர்களின் வேண்டுதலை ஏற்று முருகப் பெருமான் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வே, சூரசம்ஹாரம் என அழைக்கப்படுகிறது.
மாலையில் கடற்கரையில் எழுந்தருளும் சுவாமி ஜெயந்திநாதர், முதலில் யானை முகம் கொண்ட தாரகாசூரனை சுவாமி வேல் கொண்டு வதம் செய்கிறார். பின்னர் சிங்க முகமாகவும், தன் முகமாகவும் அடுத்தடுத்து உருமாறும் சூரனை சுவாமி வதம் செய்கிறார். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறும் சூரனை சேவலும், மயிலுமாக மாற்றி, சுவாமி தன்னுடன் ஆட்கொள்கிறார்.
இந்நிகழ்வைக் காண பக்தர்கள் அலைகடலெனத் திரண்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கில் பக்தர்கள் வருவார்கள் என்பதால் திருச்செந்தூரில் 3,500 போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். கடற்கரையில் தடுப்பு வேலிகள், கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.