சென்னையில் பட்டாக்கத்தியுடன் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட சம்பவத்தில் 6 பேர் மீது ஆயுத தடைச் சட்டம் உள்பட 7 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தில் அமைந்துள்ள பச்சையப்பன் கல்லூரியில் ரூட் தல பிரச்சனையில் மாணவர்கள் சிலர் ஒன்று கூடி கல்வீசி தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் ஒரு மாணவருக்கு காயம் ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த கீழ்ப்பாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு உடனடியாக விரைந்து சென்றனர்.
போலீசாரைக் கண்டதும் கும்பலாக நின்றிருந்த மாணவர்கள் தாங்கள் வைத்திருந்த பொருட்களை அப்படியே போட்டு விட்டு சிதறி ஓடியுள்ளனர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்த போது 6 மாணவர்கள் சிக்கி கொண்டனர்.
பின்னர் மாணவர்கள் விட்டுச் சென்ற பையை சோதனையிட்ட போது அதில் 8 பட்டாக்கத்திகள் மற்றும் காலி மதுபாட்டில்கள் இருப்பதை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
இதனையடுத்து போலீசார் 6 பேரிடமும் நடத்திய தீவிர விசாரணையில், பச்சையப்பன் கல்லூரி திருத்தணி ரூட்டு மாணவர்களுக்கும், பூந்தமல்லி ரூட்டு மாணவர்களுக்கும் இடையே மோதல் நடந்தது தெரிய வந்தது.
கெத்துக்காட்ட திருத்தணி ரூட் மாணவர்கள் கத்தி மற்றும் மதுபாட்டில்களை கொண்டு வந்து தாக்குதல் நடத்தியதும் தெரிய வந்தது.
இந்த நிலையில் தாக்குதல் சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் 6 மாணவர்கள் மீது ஆயுத தடை சட்டம், பிறருக்கு இடையூறாக செயல்படுதல் உள்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கல்லூரி மாணவரான பூந்தமல்லி ரூட் தல பிரேம் குமார் மற்றும் திருத்தணி ரயில் ரூட் தல கல்லூரி மாணவர் கிஷோர் ஆகியோரையும் போலீசார் கைது செய்துள்ளனர்.